search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வலை சேதம்"

    முத்துப்பேட்டை அருகே மீனவர்களை தாக்கி வலைகளை சேதப்படுத்திய 5 பேர் கும்பலை போலீசார் கைது செய்தனர்.

    முத்துப்பேட்டை:

    திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையை சேர்ந்த 7 பேர் கும்பல் நேற்று முன்தினம் இரவு ஜாம்புவானோடை படகு துறையில் மதுபோதையில் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த படகுகள் மற்றும் வலைகளை சேதப்படுத்தினர். இதை பார்த்த அங்கு நின்ற மீனவர்கள், அவர்களை கண்டித்தனர். இதனால் இருதரப்பினர் இடையே வாக்குவாதம் முற்றி தகராறு ஏற்பட்டது.

    இதைக்கண்ட அக்கம் பக்கத்தினர் தகராறில் ஈடுபட்டவர்களை சமாதானம் செய்து அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.

    இந்த நிலையில் அந்த கும்பல், தங்களது ஆதரவாளர்கள் 25-க்கும் மேற்பட்டோருடன் நள்ளிரவில் ஜாம்புவானோடை படகு துறைக்கு சென்று அங்கிருந்த மீனவர்களின் படகுகள் வலைகள், சைக்கிள் மற்றும் பொருட்களை அடித்து உடைத்தனர். மேலும் அந்த பகுதியில் மீன்பிடிக்க சென்ற மீனவர்களை அரிவாளால் வெட்டினர். சரமாரியாக கட்டையால் தாக்கினர்.

    இந்த தாக்குதல் சம்பவத்தில் குணசேகரன்(வயது 48), ராமமூர்த்தி(44), பெரியசாமி(40), பத்மநாதன்(45) ஆகிய 4 பேருக்கு உடலில் பல இடங்களில் அரிவாள் வெட்டு விழுந்தது. அரிவாள் வெட்டில் படுகாயம் அடைந்த மீனவர்கள் முத்துப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

    பின்னர் அவர்கள் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து தகவல் அறிந்த முத்துப்பேட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு இனிகோதிவ்யன், இன்ஸ்பெக்டர் ராஜேஷ், சப்-இன்ஸ்பெக்டர் விஜயகிருஷ்ணன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று நடந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர். இந்த நிலையில் மீனவர்களை வெட்டியவர்களை கைது செய்யக்கோரி முத்துப்பேட்டை போலீஸ் நிலையத்தை மீனவர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இது குறித்த புகாரின் பேரில் முத்துப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதுதொடர்பாக ஜாம்பவனோடை பகுதியை சேர்ந்த வினோத் (22), விக்னேஸ்வரன் (23), மணிகண்டன் (24), வசந்த குமார் (25), பழனிமுருகன் (25) ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் சிலரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    ×